Wednesday, February 1, 2012

பூண்டு: இருப்பு வைக்காமல் விற்கலாம்!









 ÷பூண்டு ஒரு முக்கிய நறுமணப் பயிர் ஆகும். இது வாசனை மற்றும் சுவையூட்டும் பொருளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெங்காயத்தைப் பயன்படுத்துவோரில் பலர் இதைப் பயன்படுத்துகின்றனர்.


 ÷மற்ற நறுமண வகைப் பயிர்களை ஒப்பிடுகையில் பூண்டு அதிக சத்துள்ள ஒன்றாகும். இதில் புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட் ஆகியவை நிறைந்துள்ளன.


 ÷உலக அளவில் பூண்டு சீனாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. உலக மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 56.85 சதவீதம். அதைத் தொடர்ந்து இந்தியா (15 சதவீதம்), வங்கதேசம் (2.50 சதவீதம்), மியான்மர் (2.19 சதவீதம்), கொரியா (2.19 சதவீதம்) மற்றும் ரஷியா (1.98 சதவீதம்) ஆகிய நாடுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


 ÷பூண்டை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா, இப்போது மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மாறியுள்ளது. இதற்குக் காரணம் 2009-10 ம் ஆண்டில்
 சீனாவின் வரத்து குறைந்து இந்தியாவில் அதிகரித்ததே ஆகும். இந்தியா இப்போது வங்கதேசம் மட்டுமல்லாது பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு பூண்டை ஏற்றுமதி செய்கிறது.


 ÷நறுமண பொருள் வாரியத் தகவலின்படி 2010-11 ம் ஆண்டில் இந்தியாவின் பூண்டு ஏற்றுமதி 17,300 டன்கள் ஆகும். அதன் மதிப்பு ரூ. 69.77 கோடியாகும். ஏற்றுமதி அளவீட்டில் 62.14 சதவீதமும், மதிப்பீட்டில் 43.60 சதவீதமும் 2010-11 ம் ஆண்டில் உயர்ந்துள்ளதாக நறுமணப் பொருள் வாரியம் குறிப்பிடுகிறது.


 ÷இந்தியாவில் அதிக அளவு பற்களையுடைய பூண்டு ரகங்களே பயிரிடப்படுகின்றன. இவை உள்நாட்டில் விற்கப்படுகின்றன. ஆனால் பெரியதும், குறைவான எண்ணிக்கையிலுமான பற்களையுடைய ரகங்களே ஏற்றுமதிக்கு முன்னுரிமை பெறுகின்றன.


 ÷பூண்டு பயிரிடப்படும் பரப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் பூண்டு 2.09 லட்சம் ஹெக்டரில் பயிரிடப்பட்டு 12.64 லட்சன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
 ÷இந்தியாவில் மத்தியப்பிரதேசம் பூண்டு உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 26 சதவீதம் பூண்டு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, குஜராத் (19.11 சதவீதம்), உத்தரப்பிரதேசம் (16.77 சதவீதம்), ராஜஸ்தான் (11 சதவீதம்), ஒடிசா (5.25 சதவீதம்), பீகார் (16.77 சதவீதம்) ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.


 ÷செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூண்டு விதைக்கப்பட்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஊட்டி 1 ரகமே நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.


 ÷தமிழ்நாட்டில் அக்டோபர்-நவம்பர் மற்றும் ஜூன்-ஜூலை ஆகிய இரு பருவங்களில் பூண்டு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் 2008-09 ம் ஆண்டில் 351 எக்டரில் பூண்டு பயிரிடப்பட்டு 2,067 டன் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் உற்பத்தித் திறன் 5,889 கிலோ/ ஹெக்டர் ஆகும்.


 ÷தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பூண்டு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. வியாபாரிகள் மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.
 ÷நீலகிரியில் இருந்து பிப்ரவரியிலிருந்து பூண்டு வரத்து தொடங்கும். எனவே விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுப்பதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையமானது, மேட்டுப்பாளையம் பூண்டு மண்டியில் நிலவிய விலை நிலவரங்களை ஆய்வு செய்தது.


 ஆய்வின் முடிவு: அறுவடையின்போது, அதாவது பிப்ரவரி,மார்ச் 2012-ல் பூண்டின் விலை கிலோவுக்கு ரூ. 75.80 வரை நிலவும். அதன்பிறகு பூண்டின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே விவசாயிகள் இருப்பு வைக்காமல் பூண்டை விற்பனை செய்யலாம்.


 மேலும் விவரங்களுக்கு: ந.அஜ்ஜன், இயக்குனர், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-641003. தொலைபேசி: 0422- 2431405.


 தொழில்நுட்ப விவரங்களுக்கு: ப.பரமகுரு, பேராசிரியர் மற்றும் தலைவர், வாசனை மற்றும் நறுமணப் பொருள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003. தொலைபேசி 0422-6611284.
 செல்போன் -94423 28942.

No comments:

Post a Comment